சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் ,ஜெயச்சந்திரன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைதுறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி ஞாயிறன்று திறந்து வைத்தார்.
இதனைதொடர்ந்து நீதிமன்ற திறப்பு நிகழ்ச்சிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்தது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் நடராஜர் திருக்கோயில்கள் போல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் சுமார் ரூ.24.16 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட நீதிமன்றம் 150 ஆண்டுகாலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான விழாவினை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரத்தில் சார்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது. மேலும் கூடுலாக ஒரு சார்பு நீதிமன்றம் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களில் சி.சி.டி.வி கேமரா, பாதுகாப்பு உபகரணங்கள் அமைய உள்ளன. நீதிமன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக நீதி வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு புதிய நீதிமன்றகளையும், நீதிமன்ற கட்டிடங்களையும் மற்றும் நீதிமன்றங்களுக்கான பிற வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுப்பதின் நோக்கம் பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று பேசினார்.
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், அரசு 2011 முதல் கடந்த 7 வருடங்களில் 41 இடங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.527.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் . இதனை தொடர்ந்து தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசினார்.
முன்னதாக பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் ராஜவேல் திட்ட அறிக்கை வாசித்தார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி கல்வெட்டினை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன்,சிதம்பரம் எம்பி சந்திரகாசி, பாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுந்தரம்,சிதம்பரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன்,சிதம்பரம் பார் அசோசியேஷன் தலைவர் கிரி, பொதுப்பணித்துறை கடலூர் செயற்பொறியாளர் தனபால், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிடட வழக்கறிஞர்கள், நீதிதிகள், நீதி மன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.