நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூரிலிருந்து வெல்லிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூலூரிலிருந்து 11.17 மணிக்குப் புறப்பட்ட ஹெலிகாப்டர், 12.20 மணிக்கு காட்டேரி பள்ளம் பகுதியில் விபத்தில் சிக்கியது. விமானத்திற்குப் பயன்படுத்தும் பெட்ரோல் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படுவதால் கீழே விழுந்ததிலிருந்து ஹெலிகாப்டர் அணையாமல் 1.30 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்துவருகிறது. மோசமான வானிலையையும் புறக்கணித்துவிட்டு மிக சாமர்த்தியமாகப் பறக்கக்கூடிய எம்ஐ17 வி5 ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், விமானப்படை தளபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு முதல்வரும் விபத்து நடந்த இடத்திற்கு இன்று (08.12.2021) மாலை செல்ல உள்ளார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர் ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் பெரிய மரத்தில் மீது விழுந்ததாகவும், விழுந்தவுடன் பயங்கரமான தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், தரையிறங்க 10 கிலோ மீட்டர் மட்டுமே இருந்த நிலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும், 5 நிமிடம் தொடர்ந்து ஹெலிகாப்டர் பறந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.