கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேக காற்றுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொழிந்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றுடன் வீசிய கனமழை காரணமாக தத்தனேரி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தத்தனேரி மட்டுமல்லாது செல்லூர், கோரிப்பாளையம், அண்ணா நகர், கே.கே.நகர் என நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிவேக காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. தத்தனேரி-செல்லூர் செல்லக்கூடிய சுரங்கப் பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். மதுரை ஆரப்பாளையம், கரிமேடு அதனைச் சுற்றி இருக்கும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.