தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, அடையாறு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு பூவிருந்தவல்லி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறாக, சென்னையில் ஜூன் மாதம் கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஜூன் மாதங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.