கொளத்தூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொற்கிழி வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முதல்வர் பேசுகையில், ''நான் கூட காரில் வரும்போது நம்முடைய மாவட்டச் செயலாளர்களிடம் சொல்லிக் கொண்டு வந்தேன். முதலமைச்சரான பொழுது இந்த தெருவில் வந்தபோது மனுக்களாக வந்து குவியும். மனுக்கள் குவியத் தொடங்கும் போது நான் பயந்தேன். நம்மிடம் மக்கள் இவ்வளவு எதிர்பார்க்கிறார்களே என. அந்த மனுக்களை எல்லாம் வாங்கி அலுவலகத்தில் உட்கார்ந்து பரிசீலித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தேன். இப்பொழுதெல்லாம் வரும் பொழுது 25 மனுக்கள் வருவதே அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள், தாய்மார்கள், முதியவர்கள், மாணவர்கள் கொண்டுவரும் மனுக்களை பெற்று எதற்கெல்லாம் தீர்வு காண முடிகிறதோ அதற்கெல்லாம் தீர்வு கண்டு கொடுக்கிறோம் என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். அதனால் கொளத்தூருக்கு வருவது என்றாலே ஒரு தனி இன்பம். இதை சொல்வதால் மற்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது. எல்லா தொகுதிக்கும் போகும் போதும் இன்பம் கிடைக்கும். ஆனால் கொளத்தூருக்கு வரும்பொழுது என்னை தேர்ந்தெடுத்தவர்களாச்சே என்ற இன்பம் கிடைக்கும்'' என்றார்.