கோடை மாதம் எனப்படும் மே மாதம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதலே கடுமையான வெயில் தமிழ்நாட்டில். காலை 11 மணி முதல் மதியம் 4 மணிவரை பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கவேண்டிய வெயில் பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே அதிகரித்துள்ளது.
இதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பொழிகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆலங்கட்டி மழை பெய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் பெட்ரோல் பங்க் மேற்கூரை மற்றும் குடிசைகள் காற்றில் பறந்தன.
இந்நிலையில் இன்று(14.4.2022) மாலை திடீரென காற்றுடன் கூடிய மழை வீசியதில் சாலையோர மரங்கள் பல கீழே விழுந்தன, மின்கம்பங்களும் கீழே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை மக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். அதேபோல் மின்வாரியத்தினர் கீழே விழுந்த கம்பங்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கோடை மழை வெக்கையை உருவாக்கும், கோடைக்கால நோய்களை உருவாக்கும் என்பதால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் கவனமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.