வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்றும் பல மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மாலை மழை பொழிந்தது. திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழங்கரை, ஆட்டையன்பாளையம், வடக்கு பாளையம், வேலாயுதபாளையம், தாராபுரம், மேட்டுக்கடை, கன்னிவாடி, தளவாய்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிந்தது.
அதேபோல் காங்கேயம் பகுதியில் வெள்ளக்கோவில், நத்தகாடையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்தது. ஈரோட்டில் கோபிசெட்டிபாளையம், கரட்டூர், மொடச்சூர், வடுகபாளையம், கள்ளிப்பட்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. இதன் காரணமாக சோத்துப்பாறை, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பொழிந்தது. கள்ளிப்பட்டி, பெரியகுளம், ஏ.புதுப்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு வேளையில் மிதமான மழை பொழிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக நேற்று மாலை மழை பொழிந்தது. நெல்லையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் மாலையில் மிதமான மழை பொழிந்தது.