ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்ப அளவு உயர்ந்து வந்தது. சராசரியாக 104 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் மழை பெய்யாதா என ஈரோடு மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் பத்து நிமிடம் மட்டுமே மழை பெய்தது. நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் 11 மணிக்கு மேல் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து இருந்தன. பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஈரோடு மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
பொங்கல் அம்மன் கோவில் வீதி வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பலத்த காற்றில் தாக்குப் பிடிக்க முடியாமல் மாநகர் பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. ஈரோடு முருகேசன் காலனி மற்றும் கணபதி காலனி ஆகிய பகுதியில் மரக்கிளைகளுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். தற்போது அந்தப் பகுதியில் மின் ஊழியர்கள் மின்கம்பங்களைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் பலத்த மழையால் வாழை நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதைப் போல் அந்தியூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்தச் சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. தாளவாடி பகுதியில் நேற்று மூன்றாவது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் பவானிசாகர் அணை வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் மழை பரவலாக பெய்தது. மாவட்டத்தில் பெய்த இந்தத் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.