கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து அவ்வப்பொழுது மழை பெய்துவருகிறது. அந்த மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அம்மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் 10 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்று பெய்த கன மழையின் காரணமாக முட்டைகாடு சரல்விளை குருசடி கால்வாய் உடைந்தது. இதன் காரணமாக அருகில் இருந்த வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கனமழையின் காரணமாக புத்தனாறு கால்வாய் உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவருகின்றனர்.