வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2023) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்த வீடு என்ற பகுதியில் ராஜசேகர் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் 9 வயது மகள் மோனிஷா என்பவர் உயிரிழந்தார். மேலும் ராஜசேகரின் மகன் மோகன்தாஸ்(12) இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி மோனிஷா பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.