Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கனமழை! இடி தாக்கி இருவர் பலி! 

Published on 09/10/2018 | Edited on 09/10/2018
cuddalore


கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் 08/10/2018 அன்று மதியம் முதல் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.
 

இம்மழையின் காரணமாக விருத்தாசலம் அருகேயுள்ள  கம்மாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன்(60) என்ற விவசாயி.  சிதம்பரம்-விருத்தாசலம் நெடுஞ்சாலை அருகே, கம்மாபுரம் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதில் திடீரென ஏற்பட்ட இடி, மின்னல் ராமச்சந்திரனை  தாக்கியது. அதில் ராமச்சந்திரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதுபற்றி தகவல் அறிந்த, கம்மாபுரம் போலீசார் விரைந்து சென்று  ராமச்சந்திரனின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

அதேபோல்  கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி (48) என்ற  விவசாயி வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில்  உடல் உபாதைக்காக ஒதுங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தேடி பார்த்த போது அருகிலுள்ள விவசாய நிலத்தில் வீராசாமி கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற  கருவேப்பிலங்குறிச்சி போலீசார் பார்த்தபோது அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் இடி, மின்னல்  வீராசாமியை  தாக்கியதால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீராசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்