நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.