சேலத்தில், இளைஞர்கள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் மட்டுமின்றி கணிசமானோர் மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளையும் போதைக்காக பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் மருந்துக் கடைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி எச்சரித்து வருகின்றனர். எனினும், வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மீண்டும் புகார்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''சேலம் சரகத்தில் 1500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி சில மருந்து கடைக்காரர்கள் வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம். மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகளை விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மீது மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும். புகாருக்குள்ளான கடையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கிறோம்.'' என்றார்.