திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகே அமைந்துள்ளது சிறுமயங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறுமயங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதியன்று, இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கம்போல் காலை உணவு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த பள்ளியைச் சேர்ந்த 49 மாணவ மாணவிகளும் மற்றும் ஒரு ஆசிரியை உள்ளிட்டோர் இந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு பாடத்தை கவனிக்க தொடங்கினர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மாணவருக்கு வாந்தி ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில், அந்த காலை உணவை சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு அடுத்தடுத்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை, இந்த விவகாரத்தை உடனடியாக தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, அந்த 19 மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருத்துவ மற்றும் ஊரக இணை இயக்குநர் லட்சுமி மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, காலை சிற்றுண்டி சாப்பிட்ட 20 மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் ராஜ் மோகன் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வரும்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். காலை உணவை சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.