வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களிலும், அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணிக்குள்) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். உள்ளூரில் பெய்து வரும் மழை நிலவரத்தைப் பொறுத்து தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கினாலோ, வகுப்புகள் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டாலோ விடுமுறை அளிக்கலாம் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.