இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன், தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக ஜெயங்கொண்டான் என்பவர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் நடிகர் பார்த்திபனிடம் தான் பணிபுரிந்ததாகவும் அவர் வீட்டில் முன்பு நடந்த திருட்டில் சந்தேகப்படப்பட்ட சில பணியாளர்கள் நிறுத்தப்பட்டதாகவும் அவர்களில் ஒருவரிடம் தான் பேசியதற்காகப் பார்த்திபன் தன்னைத் தாக்கியதாகவும் தெரிவித்தார். சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் டப்பிங் தியேட்டருக்குத் தான் சென்ற போது அங்கிருந்த பார்த்திபனும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியும் தன்னைத் தாக்கி மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட முற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் புகார் குறித்து நடிகர் பார்த்திபனிடம் நாம் பேசியபோது, "முதலில் ஜெயங்கொண்டான் என் படத்தில் பாடலாசிரியர் இல்லை. அவர் என் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். உணவு உபசரிப்புகளைக் கவனித்துக்கொள்வார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என் வீட்டில் நகைகள் திருடுபோயின. இது குறித்து காவல்துறையில் புகார் செய்தேன். அவர்களும் விசாரித்துவந்தார்கள். விசாரணையில் என் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண் மீது சந்தேகம் வந்தது. எனக்கும் அந்தப் பெண் மீது ஏற்கனவே சந்தேகம் இருந்தது, காவல்துறையும் சந்தேகம் காட்டியது. வேலையிலிருந்து அந்தப் பெண்ணை ஏற்கனவே நிறுத்தியிருந்தேன். அப்படியிருக்கும்போது என் வீட்டில் பணிபுரிந்த ஜெயங்கொண்டான், அந்தப் பெண்ணுடன் நட்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸ் டப்பிங் தியேட்டரில் என் 'ஒத்த செருப்பு' படத்தின் பணிகளில் இருந்தேன். அங்கு வந்த அவரிடம் இது குறித்து விசாரித்தபோது, முதலில் மறுத்த அவர் பின்பு ஒத்துக்கொண்டார். உடனே பயத்தில் அங்கிருந்து இறங்கி ஓடிவிட்டார். அவராகவே ஓடிவிட்டு இப்போது நான் தள்ளிவிட்டதாகப் புகார் கொடுக்கிறார். மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டால் எப்படி வந்து புகார் கொடுக்க முடியும்? அந்தத் திருட்டு சம்பவத்திற்குப் பிறகு சிலரை நான் வேலையை விட்டு நீக்கினாலும் இவரை வைத்திருந்தேன். கடந்த வாரம் கூட இவருக்குப் பண உதவி செய்தேன். இவர் எனக்கு துரோகம் செய்துவிட்டு அது குறித்து நான் கேட்டதற்கு இப்படியொரு வீண் பழியை என் மீது சுமத்தியுள்ளார்" என்று கூறினார்.
சம்பவம் நடந்த சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள லீ மேஜிக் லேண்டர்ன் (என்ற) ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் அந்த சமயத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்களும் இதையே தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.
— R.Parthiban (@rparthiepan) May 9, 2019
மகிழ்ச்சி!