கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். ''அனைத்து மருத்துவர்களும் அங்கே இருக்கிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை அமைச்சரும் இருக்காரு. பேச முடியல அவரால்., நெஞ்சு வலியால் சிரமமாக இருக்கிறது.'' என்றார் .
'செந்தில் பாலாஜி அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாக அமைச்சர்கள் சொல்லியுள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் அதை எல்லாம் கேட்கவில்லை. பார்த்தேன் அவரால் பேச முடியவில்லை. தட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஒரு மணி நேரம் காத்திருந்தேன் முதலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்கள். பின்பு கூப்பிட்டார்கள். போய் பார்த்துவிட்டு வந்தேன். பேச முடியாத நிலைமையில் இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.