சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
சேலம் சங்கர் நகர் ஹரேகிருஷ்ணா சாலையைச் சேர்ந்த தொழில் அதிபர் கண்ணன் (53). இவர் சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன்மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் காவல்துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அஸ்தம்பட்டி காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17, 2019) காலை கண்ணன் வீட்டில் திடீரென்று சோதனை நடத்தினர். அவருடைய வீட்டில் இருந்து, சட்ட விரோத தொழில்கள் தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், 500 ரூபாய் நோட்டு கட்டுகள், 200 ரூபாய் நோட்டு கட்டுகளும் ஏராளமாக இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர், சேலம் வருமானவரித்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து, வருமானவரித்துறை உதவி ஆணையர் சிவசெல்வி தலைமையில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்து விசாரித்தனர். மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றினர். 40 லட்சம் ரூபாய்க்கு மேல் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
மேஜை டிராயர், பீரோ அலமாரிகளில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களையும் கைப்பற்றினர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் சிக்கின.
இது தொடர்பாக தொழில் அதிபர் கண்ணன், அவருடைய மனைவி ஆகியோரிடம் வருமானவரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தல் நேரத்தில் மொத்தமாக 40 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் சிக்கியுள்ளதால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவரிடம் அரசியல் கட்சியினர் யாராவது கொடுத்து வைத்தார்களா? அல்லது ஹவாலா முறையில் கைமாற்றப்பட்ட பணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் காவல்துறை மற்றும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.