நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் குடியுரிமை திருத்தச் சட்டம் என எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எதிர்வினையாற்றி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது ட்விட்டர் பதிவில் ''பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறையை செய்தது யார்? குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றிய உங்கள் கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைமுதலில் சொல்லுங்கள்.
அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்தமுடியாது'' என தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?
— சீமான் (@SeemanOfficial) December 19, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!
அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!