இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்நிலையில் இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் திமுக கூட்டணி தலைவர், என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றி அடைந்துள்ளார். அவருக்கும் என என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மத்தியில் என்டிஏ மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்கப் போகிறது. மூன்றாவது முறை மோடி பிரதமராக பதவி ஏற்கப் போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'நீங்கள் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா? எனக் கேட்டதற்கு, ''இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை'' என்றார்.