ஆண்டிபட்டி அருகே ஜீவ சமாதி அடைய முயன்ற, அகோரியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் உள்ள, ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகனான அசோக் என்ற சொக்கநாதர், 13 வயதில் காணாமல் போனார். தற்போது, 26 வருடங்கள் கழித்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, தான் வீட்டை விட்டு வெளியேறி, காசிக்குச் சென்றதாகவும், அங்கு சிவனடியார்களிடம் தீட்சைப் பெற்று அகோரியாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
திடீரென நேற்று முன்தினம் இரவு சொக்கநாதர், ஜீவசமாதி அடையப் போவதாக, போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு ராஜதானி போலீசார் வந்தனர். அப்போது, கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 12 அடி ஆழம் குழி தோண்டப்பட்டிருந்தது. குழிக்குள் சிமென்ட் ஸ்லாப் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளியே ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அதன் உள்ளே சொக்கநாதர், அகோரி கோலத்தில் அமர்ந்திருந்தார். அருகில் சிவன் படம், ருத்ராட்ச மாலை, பூக்கள் கிடந்தன. அப்போது போலீசார் அவரிடம் ஜீவசமாதி அடையக்கூடாது, மேலே வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அகோரி சொக்கநாதர், தற்போது நாட்டில் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி, மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நல்ல மழைபெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக சிவன் உத்தரவிட்டதால், பூமிக்கு அடியில் 9 நாட்கள் தவம் இருக்கப் போகிறேன். ஒரு நாள் கழித்து, குழி மீது ஸ்லாப் போட்டு, மேலே மூடிவிடுங்கள். அதன்பின் 9 நாள் கழித்து தீபாவளிக்கு முதல் நாள், நான் வெளியே வருவேன்.
நான் சித்தர் இல்லை அகோரி. நான் 25 வருடங்களாக தண்ணீர் குடிப்பதில்லை புகை மட்டுமே புகைத்து வாழ்கிறேன். நான் சாகமாட்டேன். 24 வருடங்களுக்கு முன்பே இறந்து, பல பிறவிகள் எடுத்து மீண்டும், மீண்டும் உயிருடன் வந்துகொண்டிருக்கிறேன். இது எனது உண்மையான உருவம் அல்ல. நான் இப்போது பாம்பு ரூபத்தில் உள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள். அதனால், என்னை தவம் இருக்கவிடுங்கள் என்று கூறினார். அப்போது போலீசார் பூமிக்குள் இறங்கி, பூஜை செய்ய அரசு அனுமதி இல்லை. வெளியே வாருங்கள் என்று கூறினர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அகோரிக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வெளியே வந்த அகோரி குழிக்கு மேலே அமர்ந்தார். பூமிக்கு அடியில் அமர்ந்து, பூஜை செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் சிவன் மற்றும் நந்தி சிலைகளைப் பிரதிஷ்டை செய்து அதன் அருகில் அமர்ந்து பூஜை செய்ய உள்ளேன் என்று கூறினார்.
இதையடுத்து, பொதுமக்கள் குழியை மூடினர். இருந்தாலும் மீண்டும் அகோரி சொக்கநாதர், குழிக்குள் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பும் இருந்து வருகிறது.