" பிரதமர் மோடி அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்," என அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்தார்.
புதுவை மாநிலம் காரைக்காலுக்கு வந்திருந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது, " திருநங்கைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எனக்கு இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் குழுவில் என்னையும் சேர்த்திருப்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் அவர்கள் கொடுத்திருக்கும் வாய்ப்பை, கடமையை சரியாக பயன்படுத்தி அனல் பறக்கும் வகையில் பிரச்சாரத்தை செய்வேன்.
மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் அபூர்வமான முறையில் அபார வெற்றிபெற நாம் உழைக்க வேண்டும். சுப்பிரமணியசாமி பிரியங்கா காந்தியை பற்றி பேசுவது ஏற்கத்தக்கதல்ல. பெண்களை ஒரு சக்தியாக பார்க்க வேண்டும். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடம் கொடுக்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அவர் நிச்சயம் செய்வார்.
அதேபோல் பொறுப்புகளுக்கு பெண்கள் அதிக அளவில் முன்வரவேண்டும். துணிச்சலுடன் செயல்பட வேண்டும். பிரதமர் மோடி அறிவியல்பூர்வமான ஊழலை செய்து ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார். ரபேல் முறைகேடு குறித்து ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு எதிராக குரல் எழுப்புவார்களே தவிர பதில் அளிக்க மறுக்கிறார்கள்.
தேர்தலை மனதில் கொண்டே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவ்வளவு கோபத்தில் இருக்கிறார்."என்று கூறியுள்ளார்.