தமிழ்நாடு முழுவதும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மாணவர்களின் நலன் கருதி மாநில முழுவதும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 13 - 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதனால் அரையாண்டு தேர்வு நெல்லை மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 6 - 12 வகுப்புகள் வரை உள்ளை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.