Skip to main content

"கெட் அவுட்..." நக்கீரன் நிருபரிடம் கோபப்பட்ட எச்.ராஜா

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

H Raja was angry with nakkheeran reporter

 

கெட் அவுட்... என நக்கீரன் நிருபரை திட்டிவிட்டு, வேக வேகமாக வெளியேறிய எச்.ராஜாவால் செய்தியாளர் சந்திப்பு பரபரப்பாகியது. நம்மை கெட் அவுட் என சொல்லிவிட்டு, இவர் ஏன் வெளியேறுகிறார் என புரியாமல் செய்தியாளர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். இது சம்பந்தப்பட்ட வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

செய்தியாளர் சந்திப்புகளில் ஆவேசமாக காணப்படும் எச்.ராஜா, எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால், எச்.ராஜாவின் பிராண்டான, 'ஆண்டி இந்தியன்' அல்லது 'ஆண்டி இந்து' போன்ற புகழ்பெற்ற பட்டங்கள், சம்பந்தப்பட்ட நிருபருக்கு சூட்டப்படும். அத்துடன் எச்.ராஜா விடைபெற்று செல்வார். அவரது ஆதரவாளர்கள், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவர். 

 

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு சார்பில், செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்ட எச்.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து தெரிவித்த எச்.ராஜாவிடம், நக்கீரன் நிருபர் ராஜா கேள்விகளை முன்வைத்தார். இதை எதிர்கொள்ள முடியாத எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆனாலும், அசராத நக்கீரன் நிருபர், தொடர்ச்சியாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில், கால்டுவெல் எழுதியது  ‘புனைவுச் சுருட்டு’ என எச்.ராஜா பேச, பதிலுக்கு மகாபாரதம் மாதிரியா...? என நக்கீரன் நிருபர் பதில் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட அங்கிருந்த பலரும் சிரித்துவிட்டனர். இதனால், ஆவேசமான எச்.ராஜா, I Condemn You.. Get Out என காட்டமாக திட்டினார். வெளியே போ என சொல்லிவிட்டு, எச்.ராஜா அரங்கை விட்டு வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது.

 

இதையடுத்து, பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான சங்கர் என்பவர் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தினார். மகாபாரதத்தில் கிருஷ்ணர் புனைவு என்பதில்தான் மாற்றுக் கருத்து இருக்கிறது. வேறு ஏதாவது தவறு என்றால் எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.. என பணிவாகக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.

 

நீ என்ன கிறிஸ்டீனா என மதத்தின் பெயரால், நக்கீரன் நிருபர் ராஜா துரைசாமியை பார்த்து எச்.ராஜா கேள்வி எழுப்பிய சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்