தன்னைக் கிண்டல் செய்து ட்வீட் போடுபவர்கள் குறித்த சிந்தனையாகவே எப்போதும் இருப்பார் போலும் எச்.ராஜா. அதனாலோ என்னவோ, இன்றைய தினகரன் நாளிதழில் வந்த பெட்டிச் செய்தி ஒன்று பளிச்சென்று பட்டிருக்கிறது. உடனே ட்வீட்டை தட்டிவிட்டிருக்கிறார்.
ரூ.200-ஐ வாங்கிக்கொண்டு தனக்கு எதிராக மீம்ஸ் போடும் கும்பலாம். தினகரனில் வந்திருக்கும் இந்தச் செய்திக்காக ‘சிறு நீர்மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்’ என்று கூச்சல் போடுவார்களாம். அதிபுத்திசாலிதான் இந்த எச்.ராஜா. அமித்ஷாவின் உரையை மொழிபெயர்த்தபோது நுண்ணீர்ப்பாசனம் என்ற சரியான வார்த்தையை அவருக்குப் பிரயேகிக்கத் தெரியவில்லை. உடலிலிருந்து வெளியேறும் கழிவு நீரைத்தான் தமிழகத்தில் சிறுநீ்ரென்று சொல்வார்கள் என்பதை அவர் அறிந்திடாதவரா? ஆனாலும், அவசரகதியில் சிறுநீர்ப் பாசனம் என்று மொழிபெயர்த்து விட்டார். இதனால், கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், தன் தவறுக்கு நியாயம் கற்பிக்கத் துடித்துக்கொண்டிருந்தபோதுதான், இன்றைய தினகரன் நாளிதழில், தாய்லாந்து குகையில் சிக்கிய 13 பேர் மீட்பு என்னும் தலைப்பில் வெளியான செய்தியில், ‘சிறு நீர்மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்’ என்று ஒரு பெட்டிச் செய்தியும் இடம் பெற்றிருக்கிறது. விடுவாரா எச்.ராஜா? இதைப் பிடித்துக்கொண்டு, விமர்சனத்திலிருந்து தான் தப்பிவிடலாம் என்று ட்விட்டிருக்கிறார்.
எச்.ராஜாவுக்கு ஒன்று தெரியவில்லை. தினகரன் செய்தியில் நீரை சிறுமைப்படுத்தவில்லை. நீர்மூழ்கியின் அளவு குறித்த பொருளாகவே ‘சிறு’ என்ற வார்த்தையைப் பிரித்துப் பயன்படுத்தியிருக்கின்றனர். சிறுநீர்ப் பாசனத்துக்கும் சிறு நீர்மூழ்கிக்கும் சம்பந்தமே இல்லாமல் முடிச்சுப்போட முயன்றிருக்கிறார்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு எச்.ராஜா வந்துவிட்டதைத்தான், அவரது ட்விட்டர் பதிவு தெளிவுபடுத்துகிறது. இனி ஒருவிரல் நீட்டி அவர் பேசினாலும்கூட, வேறொரு அர்த்தத்தில் சிரிக்கவே செய்வார்கள் மக்கள்!