![EPS Says policemen are not safe in the police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/T8UlVtO8w0SOi_4K1G0RvVElbRFuSkiW7XCGVKDghm4/1738908392/sites/default/files/inline-images/eps-mic-art-1_4.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் யில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. பிரணிதா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த எஸ்.ஐ. பிரணிதா காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம், பெண் போலீசார் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம்.
குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை. மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை. காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை. இதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.