தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசும்போது, "உள்நாட்டு போரை உருவாக்க வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரித்திரம் படிக்காதவர்களால் சரித்திரம் படைக்க முடியாது.
ஆனால் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் உள்ளன. பாடப்புத்தகத்தில் 'இந்தியா என் தாய் நாடு' என்று இருந்த உறுதிமொழி 'இந்தியா என் நாடு' என்று மாற்றப்பட்டுள்ளது. இது அமைச்சருக்கு தெரியுமா? என்றால் தெரியாது. ஏனெனில், மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரி அறிவித்தபோது, அமைச்சர் தனக்கு தெரியாது என்று சொன்னார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை இலங்கை தமிழ் அகதிகளுக்கு எதிரானது என்று சொல்வது உண்மையில்லை. ஆனால், உலக நாயகன் என்று ஒருவர் (கமல்ஹாசன்) உலக அறிவே இல்லாமல் இருக்கிறார். அவர் கேட்கிறார், இலங்கை தமிழர்கள் எல்லாம் இந்து இல்லையா? அவர்களை ஏன் சேர்க்கவில்லை? என்கிறார். அனாவசியமாக புண்ணை கிளறாதீர்கள். நான் உண்மையை எல்லாம் எடுத்துச் சொன்னால் இருக்கிற பெயரும் போய்விடும்.
அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் இந்தியா ஒப்பந்தம் போட வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கினால் இலங்கை குடியுரிமை ரத்தாகி விடும். அப்படி ரத்தானால் இலங்கையில் உள்ள அவர்களின் சொத்துக்களை அரசே எடுத்துக் கொள்ளும்.
இதனால் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அமித்ஷா கூறி இருக்கிறார். துக்ளக் விழாவில் நண்பர் ரஜினிகாந்த் ஒரு கருத்தை சொன்னார். 1971-ல் சேலத்தில் நடந்த ஊர்வலம் குறித்து பேசினார். ஈ.வே.ரா.வின் பெயரை அவர் கூறவில்லை. ஆனால், ரஜினிகாந்த், ஈ.வே.ரா.வை பேசிவிட்டார் என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருந்து இருக்க வேண்டும்" என்றார். பொதுக்கூட்டத்துக்காக பெரியகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
.