திருவண்ணாமலையில் பள்ளி தலைமையாசிரியரை அறையில் வைத்து மாணவியின் தந்தை பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி கடந்த காலாண்டு தேர்வைத் தனியாக உட்கார வைத்து எழுத வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதப்பட்ட மாணவியின் தந்தை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் லதாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், எப்படி எனது மகளை தனியாக உட்கார வைத்துத் தேர்வு எழுத வைப்பீர்கள் என்று கேட்டு தலைமையாசிரியர் லதாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை தலைமையாசிரியர் லதாவை அவரது அலுவலக அறையில் வைத்துப் பூட்டியுள்ளார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏறப்பட்டதைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூட்டிய அறையிலிருந்து தலைமையாசிரியரை மீட்டனர். மேலும் தலைமையாரிசியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.