அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், பட்டச்சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவற்றை 50% உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருந்தது. இந்த கட்டண உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அடுத்த சிண்டுகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட பொறியியல் தேர்வு கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டும் தேர்வுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும். தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.