சேலத்தில், கடை கடையாக பால் பாக்கெட்டுடன் குட்கா, பான் பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விநியோகம் செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது போதைப் பொருள்களை பறிமுதல் செய்து வந்தாலும், கடத்தல் குறையவில்லை.
இது ஒருபுறம் இருக்க, வெள்ளிக்கிழமை (அக். 23) அதிகாலை 05.00 மணியளவில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பால் பாக்கெட்டுகளை பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளுக்குப் போட்டபடி சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக ரோந்து சென்ற காவலர்களைக் கண்டதும் அந்த மர்ம நபர், வேகமாக வாகனத்தில் தப்பிக்க முயன்றார். சந்தேகத்தின்பேரில், அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வைத்திருந்த பால் பாக்கெட் பெட்டியில் குட்கா பாக்கெட்டுகளை ஒளித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
கடை கடையாக பால் பாக்கெட்டுகளைப் போடும் போது அத்துடன் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள்களையும் நூதன முறையில் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.
களரம்பட்டியைச் சேர்ந்த அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து, இதன் பின்னணியில் இன்னும் யார் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முறையான கைது நடவடிக்கை மேற்கொள்ளாததாலும், இந்த நெட்வொர்க்கில் உள்ள இதர குற்றவாளிகளையும் மடக்குவதற்காகவும் பிடிபட்ட நபரின் பெயர் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர்.