குட்கா முறைகேடு தொடர்பாக 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாகக் கடிதம் ஒன்றை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை முன்னாள் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் தற்பொழுது 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மூடிய உறையுடன் கூடிய கடிதத்தை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.