தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பல்வேறு வழிகளில் தமிழகத்திற்கு வருகிறது. இந்நிலையில் சத்திய மங்கலத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச் சாவடி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகிற, அதேபோல் இங்கிருந்து செல்கிற வாகனங்களை போலீசார் சோதனை செய்த பின்னர் அனுமதிப்பதுதான் வழக்கம். அதன்படி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகதிற்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பண்ணாரி சோதனைச் சாவடியில் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை 3 மணி அளவில் கர்நாடக மாநிலம், கொள்ளேகால் அருகே ஹனூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி மக்காச்சோளம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. போலீஸார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் வேறு சில மூட்டைகள் இருப்பதைக் கண்டு அவற்றை பரிசோதனை செய்தனர். சோதனையில் அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எனத் தெரியவந்தது. குட்கா மூட்டைகள் மக்காச்சோள மூட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குட்கா மூட்டைகளோடு அந்த லாரியைப் பறிமுதல் செய்தனர். பிறகு கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், மார்டல்லியைச் சேர்ந்த டிரைவர் காந்தராஜ், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பகுதியைச் சேர்ந்த கீளினர் ரமேஷ், பல்லடத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுயம்புலிங்கம் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ.65 லட்சம் என போலீசார் கூறுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடிப்பகுதியில் குட்காவை மறைத்துக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குட்கா பொருட்கள் யாரிடம் ஒப்படைக்கக் கொண்டுசெல்லப்பட்டது என்கிற தகவல்கள் ஏதும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.