




தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் ஆகியவை கட்டுக்கடங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கவேண்டும் என காவல்துறையை வேகப்படுத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், ஒருசில கீழ்மட்ட காவல்நிலைய அதிகாரிகள், கஞ்சா வியாபாரிகள், சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வாங்குவதை வாங்கிக்கொண்டு அவர்களை உலாவவிட்டுள்ளனர். சில இடங்களில் மட்டும் சாராய வியாபாரிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கஞ்சா, சாராய விற்பனையில் ஈடுபடும் ஆண், பெண் என இருபாலரில் யாராக இருந்தாலும், காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, பூமந்தகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி 48 வயதான ஜான்சி என்பவர். இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போதும், திருவண்ணாமலை சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் மனைவி 42 வயதான மங்கை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போதும் திருவண்ணாமலை டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரை திருவண்ணாமலை கருமாரப்பட்டி ஏரிக்கரை அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை தாலுகா போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வெங்கடேசனின் 23வயதான மகன் பாலாஜி, போளூர் நகரம் சின்னப்பா தெருவைச் சேர்ந்த 32 வயதான பாலமுருகன் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது போளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதும், அது தொடர்பாக பல வழக்குகள் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் போனது. அதன் அடிப்படையில், அவர்கள் ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் முருகேஸ்க்கு பரிந்துரை செய்தார். அவரின் உத்தரவின் பேரில் ஜான்சி, மங்கை, பாலாஜி, பாலமுருகன், குமார் ஆகிய 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவலை வேலூர் மத்திய சிறையில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.