Skip to main content

தமிழகம் முழுவதும் குட்கா சப்ளே ! யார் அந்த கடத்தல் மன்னன் !

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இதையடுத்து இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. தமிழக அரசும் 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதித்தது. இந்த உத்தரவு பின்னர் 2015-ம் ஆண்டு அறிவிப்பாணையாக அரசிதழில் வெளியிட்டது. 2013-ம் ஆண்டு முதல்வர் சட்டப்பேரவையில் குட்கா பொருட்களுக்கு தடை விதித்து அறிவித்தும் பான், குட்கா தயாரிப்பு, விற்பனை படு ஜோராக நடந்து வந்தது. புழல் பகுதியில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது நடந்து வந்தது. இதற்காக அனைத்து மட்டத்திலும் மாமூல் அளிக்கப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு தெரியவந்தது. அரசு தடை செய்தும் ஜோராக நடக்கும் விற்பனை குறித்து 2014-ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு சிலர் புகார் கடிதம் அனுப்பினர். சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜனவரி 17-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார். ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், ''கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தது. இதனையடுத்து இந்தப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்தது. இதனை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 2013-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். எம்.டி.எம் (MDM) பான் மசாலா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 Gudka Supply across Tamilnadu


 

மேலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்களைப் கைப்பற்றியதாற்கான ஆதாரங்கள் அந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே முறையான விசாரணை நடக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய கலால் வரித் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக ஹாவாலா முறையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு இதுவரை 55 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வருகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
 

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு அளித்த தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் டெல்லியிலிருந்து ரயிலில் மதுரைக்கு வந்து இறங்கிய 7800 குட்கா பண்டல்கள்.! டெல்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் திருக்குறள் எக்ஸ்பிரஸ் . இந்த வண்டி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மதுரையை கிராஸ் பண்ணி செல்லும். கடந்த டிசம்பர் 04.12.2017 லிருந்து 28.02.2018 வரைக்கும் மதுரை ரயில்வே நிலையத்தில் வாரம் இரண்டு முறையும் 20 நிமிடம் நின்று தொடர்ச்சியாக பார்சல் இறக்கியிருக்கிறார்கள். 


 

 Gudka Supply across Tamilnadu


 

இந்த நேரத்தில் தீடீர் என சோதனை நடத்திய விஜிலன்ஸ் டீம் இறக்கப்பட்ட பார்சல் எல்லாமே குட்கா பண்டல். ஆனால் இந்த குட்கா பார்சல் டெல்லியில் புக் பண்ணம் போதும் சரி… மதுரையில் டெலிவரி ஆகும் போது எந்த பார்சலும் புக் பண்ணாமலே ரெக்கார்டுகளில் இல்லாமலே டெலிவரி செய்திருக்கிறார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் துணையோடு இறக்கி வி.ஐ.பி. கேட் வழியே இறக்கி கொண்டு வந்திருக்கிறார்கள். இதை மார்ச் மாதம் முதல் வாரத்தில் விஜிலன்ஸ் டீம் கேட்டிற்கு வெளியே சென்று கொண்டு சென்ற போது ஏதேச்சியாக நடந்த சோதனை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை நூல் பிடித்த மாதிரி விசாரணையில் தற்போது அந்த 3 மாதங்களில் மட்டும் 26 முறை ஒரு முறைக்கு 300 பண்டல்கள் வீதம் 7800 பண்டல்கள் இறக்கியிருக்கிறார்கள். இது குறித்த விசாரணை மிக ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. வெளியே செல்லும் போது அந்த ரயில்வே சார்ட்டில் இந்த பண்டல்கள் வாரம் இரண்டு முறை இறக்கி இருப்பதை உறுதி செய்த போது அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதற்கான துணையான அதிகாரிகள் யார் யார் என்பதை இரயில்வே விஜிலன்ஸ் என்கொயரி நடந்து கொண்டிருக்கிறது.
 

வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு மதுரைக்குள் ரயில்வே அதிகாரிகள் துணையோடு யார் இந்த ஆயிரம் குட்கா பண்டல்களில் கோடிகணக்கில் மதிப்பு உள்ள குட்கா இறக்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையை கமர்சியல் டிபாட்மெண்ட் ஸ்டேஷன் எஸ்.எம். தான் இதற்கு முழுபொறுப்பு என்பதால் அவர்களை வைத்த இந்த விசாரணையை முடித்து விட சொல்லி டெல்லியிலிருந்து பிரஷர் அதிகமாகி கொண்டுயிருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா மணமேடு அருகே கடந்த 29ம் தேதி ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஏற்றிவந்த லாரியை வழி மறித்து மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி டிரைவர் விவேக் என்பவர் தொட்டியம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட லாரி அன்றைய தினமே திருச்சி அடுத்த பழூர் அருகே மீட்கப்பட்டது. ஆனால் லாரியில் பொருட்கள் எதுவும் இல்லாமல் சாலை ஓரம் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 
 

 Gudka Supply across Tamilnadu


 

இதுகுறித்து தொட்டியம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் முசிறி டிஎஸ்பி சீத்தாராமனுக்கு லாரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட (ஹார்லிக்ஸ் பாட்டில்கள்) பொருட்கள் திருச்சி அருகே பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள குடோனில் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சகபோலீசாருடன் முசிறி டிஎஸ்பி குடோனுக்கு நேரில் சென்றார். அப்போது போலீசைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் குடோனில் ஆய்வு செய்தபோது குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, போதை பாக்கு உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை மீட்கப்பட்ட லாரியில் ஏற்றி தொட்டியம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 

 Gudka Supply across Tamilnadu

 

அதன்பேரில் தொட்டியம் காவல்நிலையத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விசுவநாதன், முத்துகுமாரசாமி, அழகுபாண்டியன், கார்த்திகேயன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆய்வு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உணவுதரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தொட்டியம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
 

அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். லாரியில் இருந்து ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டதாக பொய்யான புகார் கூறி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றும் தொழில் போட்டியால் லாரி கடத்தல் சம்பவமும், புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்த குடோன் வட இந்தியாவிலிருந்து திருச்சி பெரியகம்மாள தெருவில் மொத்த வியாபரம் செய்யும் சேட்டு குரூப்பை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்றும் முதல் கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது என்கிறார்கள். 
 

 Gudka Supply across Tamilnadu


 

ஒரு பக்கம் தமிழகத்தில் தடைசெய்யப்பட் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நெருக்கி கொண்டுயிருக்கும் நிலையில் கடந்த வாரம் மதுரையில் 78,000 பண்டல் குட்கா இயக்கியதும், தற்போது திருச்சியில் 15 இலட்சம் மதிப்புள்ள குட்கா பண்டல் சிக்கியதும் இவ்வளவு பெரிய குட்கா விசயத்தில் கடத்தல் மன்னன் யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

 

சார்ந்த செய்திகள்