வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வழக்கமாக மழை பெய்தால் போக்குவரத்து காவலர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதால், சாலையில் இருந்து ஓரமாக ஒதுங்கிவிடுவார்கள்.
மழை பெய்ததால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பலத்த மழையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல், போக்குவரத்தை சரி செய்து வந்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொட்டும் மழையில் இரண்டு காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்ததைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அதே இடத்தில் பந்தாவாக காட்பாடி போக்குவரத்து காவல்துறை ஆர்.ஐ. (இன்ஸ்பெக்டர்) அவருடைய வாகனத்திலேயே அமர்ந்துகொண்டு செல்போன் பேசியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையும் பொதுமக்கள் பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர். கொட்டும் மழை என பாராமல் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த இரண்டு காவலர்கள் குறித்து தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.