Published on 28/04/2020 | Edited on 28/04/2020
கரோனா தொற்று பரவாமலிருக்க பயன்படுத்தப்படும் முக கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை சுமார் 700 பேரை பலி வாங்கியுள்ளது, இதில் தமிழகத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு முக கவசங்களும், கைகளை கழுவும் சானிடைசர்களும் இப்போது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. ஆனால், முக கவசங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும், சானிடைசர்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கரோனா என்ற கடுமையான தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடுமையாகப் போராடிவரும் நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த அத்தியாவசிய பொருட்களான முக கவசம் மற்றும் சானிடைசர்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி, மத்திய நிதித்துறைக்கு மனு அனுப்பினேன், எந்த பதிலும் இல்லை. எனவே, கரோனா பரவல் முழுவதுமாக தடுக்கப்படும்வரை முக கவசம் மற்றும் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை, விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.