அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 503 மையங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வு எழுதும் அறைக்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கேட்டை திறக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த தேர்வர்கள், சில இடங்களில் தங்களது ஹால் டிக்கெட்டை கிழித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கடலூர், திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் அரசுப்பணி ஆசையோடு தேர்வு எழுத வந்த தேர்வர்கள் ஏமாற்றத்துடனும் சிலர் கண்ணீருடனும் திரும்பிச் சென்றனர்.