கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள தீவளூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம் செல்வதற்கு அங்குள்ள தரைப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் இந்தப் பாலத்தைக் கடந்துதான் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் நிரம்பிவரும் நேரங்களில் தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்லும். அதனால் பள்ளி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அந்தச் சாலையைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலத்தை இடித்துவிட்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், மேம்பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பாலம் வசதியின்றி தவித்த பொதுமக்கள், தற்காலிக தரைப்பாலம் ஒன்றை அமைத்துப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், இந்த தரைப்பாலமும் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், பாலம் வசதி இல்லாததால் அப்பகுதிக்கு கடந்த இரண்டு மாதமாக போக்குவரத்து இன்றி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என வலியுறுத்தி, தரைப்பாலத்தின் மேல் நின்றுகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறையினரைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தியதன்பேரில் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.