வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது.
தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது. கனமழையை அடுத்து சென்னையில் ஒருவர், செங்கல்பட்டில் ஏழு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் காரணமாக கோயம்பேடு-வடபழனி இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஈசிஆர் வழியாக செல்லக்கூடிய புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை-புதுச்சேரிக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.