Skip to main content

பைனான்சியரிடம் மோசடி செய்த மளிகை கடைக்காரர் கைது! 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Grocer arrested for defrauding financier!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியைச் சேர்ந்தவர் தணிகைவேல்(40). இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது பைனான்ஸ் கடைக்கு அருகே மளிகை கடை நடத்தி வருபவர் அபூபக்கர்(43). இவர், தணிகைவேலிடம் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஐந்து தவணைகளாக 18 லட்சம் ரூபாய் மாத வட்டிக்கு வாங்கியுள்ளார். பணத்திற்கான வட்டியையும் அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். இதனால் தணிகைவேலுக்கு அபூபக்கர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

 

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர், தனது மகன் பெயரில் உள்ள காலி மனையை தனது மனைவி அலிமா பானுவுடன் சேர்ந்து தணிகைவேலிடம் விற்பனை செய்வதற்கு விலை பேசி அதில் முன்பணமாக ரூ.10 லட்சமும், இரண்டாவது முறையாக மேலும் ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனைவி பெயரில் காலி மனையை கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு மேலும் தண்டல் முறையில் மூன்று லட்சம் பணம் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், தணிகைவேலுக்கு அபூபக்கர் மனைவி அலிமா பானு கிரயம் கொடுத்த சொத்து அபூபக்கரின் மகன் பெயரில் உள்ள சொத்து என்பது தெரியவந்துள்ளது. மகன் பெயரில் உள்ள சொத்தை தாய் எழுதிக் கொடுத்தது செல்லாது என்பதால் தன்னை ஏமாற்றும் நோக்கத்தில் அபூபக்கரும் அவரது மனைவியும் ஈடுபட்டுள்ளதாக கூறி அவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அபூபக்கர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் வாங்கிய மொத்தம் 41 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தரும்படி அபூபக்கர் அவரது மனைவி அலிமாபாபு ஆகியோரிடம் தணிகைவேல் கேட்டுள்ளார்.

 

பணத்தை தர மறுத்த இருவரும் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தணிகைவேல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி அபூபக்கர் அவரது மனைவி அலிமா பானு ஆகியோர் மீது பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று அபூபக்கரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்