திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பகுதியில் உள்ள கரிசல் பூமிகளான கரிசல்பட்டி, கோனூர், அனுமந்தராயன்கோட்டை, தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக அப்பகுதி விவசாயிகள் பனியில் விளையக்கூடிய பயிரான சுண்டல் பயிரை (கொண்டைக்கடலை) பயிரிட்டு வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் பயிரிட்டிருந்த சுண்டல் பயிர் நன்கு விளைந்து காய் காய்த்து அறுவடை செய்யும் நேரத்தில் பச்சை புழுக்கள் தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்து அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்தனர்.
இதுசம்மந்தமாக கடந்த 18ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் ஆலோசனை பேரில் கொண்டைக்கடலை (சுண்டல்) பயிரில் பச்சைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பெ.சுருளியப்பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் ந.மா.அறிவுடைநம்பி ஆகியோர் தலைமையில் வேளாண் குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சுண்டல் பயிரில் பச்சைப்புழு தாக்குதல் அதிகளவில் இருப்பதை கண்டறிந்தனர். பச்சை புழுக்களை கட்டுப்படுத்த 500 கிராம் வேம்பு விதைகளை இடித்து பொடியாக்கி ஒரு துணியில் கட்டி அதனை 10லிட்டர் தண்ணீரில் நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த கசாயத்தை நன்கு பிழிந்து அந்த நீரை 1 டேங்க் என்ற அளவில் தெளிக்கலாம் என அறிவுரை வழங்கியதோடு பயிர்கள் பயிரிட்டுள்ள ஏக்கருக்கு ஏற்றாற்போல் வேம்பு விதைகளை பயன்படுத்தி அழிக்கலாம் என்றார். புழுத்தாக்குதல் தென்பட்டவுடன் இந்த எளிய முறையை பின்பற்றி குறைந்த செலவில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் புழு தென்பட்டவுடனே வீரிய ரக பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.