சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இரவு நேரத்தில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. மேலும், இது தொடர்பான விசாரணை புத்தாண்டை அடுத்து விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கோரமண்டல் நிறுவனத்தில் அமோனியா குளிரூட்டும் கருவி செயலிழந்ததன் காரணமாக தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அங்குள்ள மக்களிடம் ஏன் எச்சரிக்கை விடுக்கவில்லை?. மேலும், அந்த உர ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அடிக்கடி ஆய்வு ஏன் நடத்தவில்லை?. என்று கேள்வி எழுப்பியது
இதனை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ‘துறைமுகத்தில் இருந்து நிறுவனத்திற்கு அமோனியா எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட அழுத்தத்தால் தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளது.