தமிழகத்தில் கடைசி விவசாயி உயிருடன் இருக்கும் வரை பசுமை வழிச்சாலைத் திட்டம் நிறைவேறாது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறினார்.
சேலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா, கட்சிக் கொடியேற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முனேற்றக் கழகத் (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் இன்று (ஜூலை 7, 2018) சேலம் வந்தார். அங்கே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ‘’பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை ஜெயலலிதா ஒருபோதும் செயல்படுத்தியது இல்லை. அவர் இருந்தவரையிலும் மக்களுக்கு எதிரான மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்தவும் அனுமதித்ததில்லை. 8 வழிச்சாலைத் திட்டத்தை பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு உடனுக்குடன் நிதி ஒதுக்கியதும், அதை வேகமாக செயல்படுத்தி வருவதும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு மத்திய அரசின் திட்டம் என்று கூறும் தமிழக அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?. சென்னை - சேலம் செல்ல ஏற்கனவே பல்வேறு வழித்தடங்கள் இருக்கும்போது பசுமை வழிச்சாலைத் திட்டம் தேவையற்றது.
வனத்துறை வசம் உள்ள 200 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவது எதற்காக என தெரியவில்லை. அவசரகதியில் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் இந்த அரசு, இழப்பீடு என்கிற பெயரில் திணிப்பீடு செய்கிறது.
இந்த திட்டத்தால் ஏராளமான கிணறு, ஏரிகள் மட்டுமின்றி மரங்களும் அழிக்கப்படுகின்றன. இயற்கையையும், விவசாயத்தையும் அழித்து கிடைக்கும் திட்டம் தேவையற்றது. தமிழகத்தில் கடைசி விவசாயி இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம்.
விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம். பொதுமக்களை சமாதானப்படுத்தி, அவர்களிடம் திட்டத்தின் சாதக, பாதகங்களை எடுத்துக்கூற வேண்டும். மக்களும் விவசாயிகளும் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். ஆர்கே நகர் இடைத்தேர்தல் போன்றுதான், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் உள்ள 20 சதவீத இளைஞர்கள், பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். 18 எம்எல்ஏ தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடித்தினாலும் அதிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, அடுத்த ஆண்டு மே மாதம் வரை மட்டுமே நீடிக்கும்.’’- இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
கட்சி நிர்வாகிகள் எஸ்.கே. செல்வம், வெங்கடாசலம், பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தார்.