திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் என இரண்டு வகையான பேருந்து நிலையங்கள் உள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையத்திலும் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். நள்ளிரவை கடந்தும் இந்த பேருந்து நிலையம் ஆட்களின் வருகை குறையவே குறையாது. ஆனால் இங்கு போதுமான போலிஸ் பாதுகாப்பு எதுவும் கிடையாது. இதனால் வழக்கம் போல் பஸ்ஸாண்ட் திருடர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் தங்களுடைய பொருட்களை பறிகொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை நிறுத்துவதற்காக எந்த முயற்சியையும் போலிஸ்பக்கம் எடுக்கவில்லை என்கிற குற்றசாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு கண்டக்டர் ஒருவர் பணத்தை பறி கொடுத்த சம்பவமே உதாரணம்.
அரியலூர் மாவட்டம் கொரத்தாகுடியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (40). அரசு பஸ் கண்டக்டர். இவர் திருச்சி-அரியலூர் இடையே அரசு பஸ்சில் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு அரியலூரியில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு திருச்சி சத்திரம் வந்தனர். பயணிகளை இறக்கிவிட்டபின், மீண்டும் அடுத்த டிரிப் 2 மணி என்பதால் பஸ்சை பஸ்நிலையத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் விஜயகுமார் மற்றும் துரைக்கண்ணு இருவரும் பஸ்சில் உள்ள சீட்டில் படுத்து தூங்கினர். இதில் துரைகண்ணு பணப்பையை தலைக்கு வைத்து படுத்திருந்தார். அயர்ந்து தூங்கிய நிலையில் இரவு 1.30மணிக்கு திடீரென கண் விழித்து பார்த்த போது, தலைக்கு வைத்திருந்த பேக்கை காணாததால் திடுக்கிட்டார்.
பேக்கில் வசூல் பணம் ரூ.13,500 மற்றும் ரூ.91,500 மதிப்புள்ள டிக்கெட்டுகள் மாயமாகி இருந்தது. தொடர்ந்து பஸ்சுக்குள் படுத்திருந்த டிரைவர் விஜயகுமாரை எழுப்பி நடந்த சம்பவத்தை கூறினார். இருவரும் பஸ் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவில் துரைகண்ணு புகார் அளித்தார். வழக்குபதிந்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.