சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “உலகளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்களின் கனவு பெரியதாக இருக்க வேண்டும். இந்தியா மறுமலர்ச்சி அடையும் தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர், “சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், அப்துல் கலாம் உள்ளிட்ட 6 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். சர் சி.வி. ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் இங்கு படித்தவர்களே. பாலின சமத்துவத்திற்கான கோயிலாகச் சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. வளமான கலாச்சாரம், நாகரீகத்தைக் கொண்டது தமிழ்நாடு; கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலை மனிதக் குலத்தின் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது” என்றார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தனது டிவிட்டர் பதிவில், “சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறள் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம். பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வளமான வரலாறும் புகழ்பெற்ற மரபும் உள்ளது. இந்தியாவின் ஆறு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்தவர்கள். இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே பாதையில் அவர்களும் சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.