திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் வகையிலும், இதற்கான கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு கோரியும், மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தவும் இந்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கலைஞர் மண்டலமான கன்னியாகுமரியில் துவங்கிய பேரணி சனிக்கிழமை கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு பேரணி வந்தடைந்தது. இதற்கு முன்னதாகவே சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் பேரணிக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையிலான கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தில் பேரணியை துவக்கி வைத்தார்.
இதையடுத்து வடலூர் நான்கு முனை சந்திப்பு வந்த உடன் வடலூர் நகர கழகம் சார்பில் பேரணியில் வந்தவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்,பெத்தநாயக்கன் குப்பம் தம்பிப்பேட்டை, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, ஒன்றிய கழக செயலாளர்கள் சிவகுமார், நாராயணசாமி தங்க.ஆனந்தன், நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகரக் கழக செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர்.பாலமுருகன், பேரூராட்சி தலைவர்கள் குறிஞ்சிப்பாடி கோகிலா குமார், காட்டு மன்னார் கோவில் கணேசமூர்த்தி, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.