எத்தனை நாகரீகம் வளர்ந்தாலும்கூட இன்னும் ஆங்காங்கே மூட நம்பிக்கைகளால் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. சரகத்திற்கு உட்பட்ட மல்லிபட்டினம் எனும் கடற்கரை கிராமத்தில் பிறந்து ஆறே மாதமான குழந்தையைப் பாட்டி பலி கொடுத்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த பெண், அதேமாவட்டம், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. சரகத்திற்கு உட்பட்ட கடற்கரை கிராமமான மல்லிப்பட்டினத்தில் இருக்கும் நபரைத் திருமணம் முடித்து, மல்லிப்பட்டினம் கிராமத்தில் கணவரின் குடும்பத்தாரோடு வசித்துவருகிறார். இப்பெண்ணின் 6 மாத கைக்குழந்தையை, அவரது சின்ன மாமியார் மீன் தொட்டிக்குள் அமுக்கி பலி கொடுத்திருக்கிறார்.
இந்த தகவல் பெண்ணின் உறவினர்களுக்குத் தெரிந்து, மல்லிப்பட்டினம் ஜமாத்துக்கும், போலீசாரின் கவனத்திற்கும் கொண்டு போனார்கள். வியாழக்கிழமை (16.12.2021) இரவு சம்பவம் நடந்த வீட்டிற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரனையில், குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்ததோடு, குழந்தையைக் கொல்லச் சொன்னது ஒரு மந்திரவாதி என்பதும் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரனையில், குழந்தையின் உறவினர்களுக்கு உடல்நலமின்றி வருவது குறித்து குழந்தையின் பாட்டி ஷர்மிளா பேகம் புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர். பட்டினத்தில் தங்கியுள்ள கேரளாவைச் சேர்ந்த முகமது சலீம் எனும் மந்திரவாதியிடம் சென்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், குழந்தைதான் பிரச்சனை என்று சொன்னதால் அனைவரும் தூங்கியபோது குழந்தையை மீன் தொட்டிக்குள் போட்டுக் கொன்றிருக்கிறார் ஷர்மிளா பேகம்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தகவலை உறுதிசெய்த போலீசார், ஷர்மிளா பேகம் மற்றும் மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.