திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி ரேணுகா. இந்த தம்பதியினருக்கு யோகிஸ்ரீ, தன்யாஸ்ரீ என இருமகள்கள் இருக்கின்றனர். நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். நாகேந்திரன் ராணுவத்தில் பணிபுரிவதால் குடும்பத்துடன் குஜராத்தில் இருக்கும் ராணுவ குடிப்பிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ரேணுகாவின் பெற்றோருக்கு ராணுவ அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ரேணுகா வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பதறிப்போன ரேணுகாவின் பெற்றோர் குஜராத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மகளின் விபத்து குறித்து கேட்டறிந்துள்ளனர். அப்போது அதிர்ச்சி தகவல் பெற்றோர்க்கு கிடைத்துள்ளது. அதில் ரேணுகா தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. பின்னர் ரேணுகாவின் உடலை சொந்த ஊருக்கு அவரது பெற்றோர்கள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுடன் வந்த ரேணுகாவின் மூத்த மகள் யோகிஸ்ரீ தனது தந்தை நாகேந்திரன் தான் தாயை தீ வைத்து எரித்துக்கொன்றதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதை கேட்ட ரேணுகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி ஆகியோரிடம் ரேணுகாவின் தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக கலெக்டர் மற்றும் எஸ்.பி உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.