இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்கிறது பஞ்சாயத்துராஜ் சட்டம். தமிழ்நாட்டில் 2016 முதல் 2019 வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் தனி அதிகாரிகளின் கீழ் நிர்வாகம் நடைபெற்றது. அப்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கிராமசபை கூட்டங்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக நடத்தவில்லை. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற எதிர்கட்சியாக இருந்த திமுக, தங்களது கட்சி சார்பில் கிராமசபா, மக்கள் சபை என்கிற பெயர்களில் கூட்டங்களை நடத்தி, மக்களை சந்தித்து குறைகளை கேட்டது.
2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்தார். கரோனா மூன்றாம் கட்ட பரவலை முன்னிட்டு திமுகவும் கிராமசபை கூட்டம் நடத்தாமல் தள்ளிவைத்துவந்தது.
இந்நிலையில் பஞ்சாயத்துராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 24ம் தேதியை தேசிய ஊராட்சிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தினை நடத்த உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள செங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். இதேபோல் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பவித்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்த அதிகாரிகள் அந்த கிராமத்தில் ஏற்பாடுகளை செய்து அங்கு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் அதிகாரிகள், பஞ்சாயத்துராஜ் சட்டம் குறித்தும், அது மக்களுக்கு வழக்கும் அதிகாரங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள்.
இதில், சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடை ஓலை முறையில் உலகத்துக்கு தேர்தல் ஜனநாயகத்தை கற்று தந்தது தமிழர்கள்தான். அதற்கான கல்வெட்டு உத்திரமேரூரில் உள்ளது. நமக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பெறுவதற்காகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், சேர்மன்கள் தேர்ந்தெடுக்கிறோம். உலகத்துக்கே நாம் முன்னோடி, இரவெல்லாம் கண்விழித்து நமது முதல்வர் மக்களுக்காக உழைக்கிறார். பல்வேறு நலத்திட்டங்களை கடந்த ஓராண்டில் செய்துள்ளார். அனைத்து திட்டங்களும் இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் உத்தமர்காந்தி விருதினை இந்த ஊராட்சி பெறவேண்டுமென கலெக்டர் விரும்புகிறார்; நானும் அதனை விரும்புகிறேன். இந்த மாவட்டத்தில் 860 ஊராட்சிகள் உள்ளன, அவைகள் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக வேண்டும்” என்று பேசினார்.
கிராமசபை கூட்டங்கள் என்பது, ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதுகுறித்து விவாதிக்கவேண்டும், மக்கள் கருத்துக்களை கேட்கவேண்டும். இந்த கிராமசபை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி, நீடித்த வளர்ச்சி என்கிற தலைப்பில் கூட்டத்தினை நடத்தவேண்டும். அதோடு, அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மக்களுடன் விவாதிக்கலாம் எனக் கூறியிருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட கிராமத்தில் தனது ஆட்சியின் சாதனைகளை பேசியதோடு, அந்த கிராம மக்களின் குறைகளை கேட்டார். அதில் தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் கால்வாய் பிரச்சனை, மருத்துவ வசதியில்லாதது, கிட்னி கல் பாதிக்கப்படுவது குறித்தெல்லாம் குறைகளை சொன்னார்கள். அதுகுறித்து அதிகாரிகளுடன் அங்கேயே கலந்து ஆலோசித்து தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட கிராமசபை கூட்டங்களில் பெரும்பாலும் அப்படியொரு விவாதமே நடைபெறவில்லை. மக்கள் பலர் தங்கள் கிராமத்தின் குறைகளை கூறுவதற்காக இந்த கிராமசபை கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பையே யாரும் தரவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இப்படியென்றால் மற்ற ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்கள் எப்படி நடந்திருக்கும்.