இந்தியாவில், உள்ளாட்சி அதிகாரத்தை வலிமைப்படுத்த ஊராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு ஆண்டும், நான்கு முறை ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திரதினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் போன்றவற்றில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் கிராம சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம்.
இந்த கிராம சபா கூட்டத்தில், கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பொதுமக்களே கலந்துகொண்டு பேசி தீர்ப்பது, தங்கள் கிராமத்தின் தேவை குறித்து அரசுக்குக் கோரிக்கை விடுப்பது, கிராம பஞ்சாயத்து நிதியை தணிக்கை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவர். இந்த கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் முடிவை உச்சநீதிமன்றம் கூட அவ்வளவு சுலபத்தில் தலையிட்டு மாற்ற முடியாத அளவுக்கு உள்ளாட்சி சட்டம் உள்ளது. அதனால், கிராமசபா கூட்டம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி நடக்க வேண்டிய கிராமசபா கூட்டம், கரோனா பரவலால் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டின் கடைசி கிராமசபா கூட்டம், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளன்று நடைபெற வேண்டும். இது நடைபெறுமா, நடைபெறாதா என்கிற கேள்வி அதிகாரிகள் மட்டத்திலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக இயக்கத்தின் இயக்குநர் பழனிச்சாமி, மாவட்டங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபா கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், அதில் அரசாங்கம் விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளின் படி தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், பொது வெளியில் இந்த கூட்டம் நடத்தப்படவேண்டும், அனைத்துப் பிரிவு மக்களும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒவ்வொருவரையும் காய்ச்சல் பரிசோதனை செய்தபின்பே அனுமதிக்க வேண்டும், கை, முகம் கழுவ தண்ணீர் சோப்பு வைக்க வேண்டும், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வைக்க வேண்டும், ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே 3 அடி இடைவெளி இருக்க வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளைக் கடைப்பிடித்து கிராமசபா கூட்டம் நடத்தப்படவேண்டும். அதில் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையைத் தொடர்ந்து இந்த முறை கிராமசபா கூட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.